இலங் கையின் முன்னாள் போராளிகள் அகதிகள் என்ற போர்வையில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற 194 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மேற்படி 194 சட்டவிரோத குடியேற்றவாசிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டிலுள்ள கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள் எனவும் 15 படகுகளில் இவ்வாறு கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இவ்வாறு சட்டவிரோத குடியேற்ற வாசிகள் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பது பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்து சேர்ந்த 194 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் இதுவரை 300 இலங்கையர் இவ்வாறு கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இவர்கள் எவரும் அகதிகள் அந்தஸ்தை பெறக்கூடிய தகுதியில் இல்லையெனவும் அதேவேளை இவர்கள் முன்னாள் போராளிகள் என்று கூறுவதற்கான எந்தவொரு சான்றும் இல்லாது இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்கள் இலங்கையிலிருந்து மலேஷியாவின் தென்பகுதியூடாக கிறிஸ்மஸ் தீவை வந்து சேர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.