உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியுடன் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கை களை அரசாங்கம் மேலும் துரிதப்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவென 25 இரசாயனப் புகை விசிறும் இயந்திரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது.
இதேவேளை இவ்வருடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் அதிகளவு இனம்காணப்பட்ட மாத மாக ஜூன் விளங்குவதா கவும் இம்மாதத்தில் மாத்திரம் 5,357 பேர் இக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச் சின் நோய் பரவுகை தடுப்பு பிரிவு மருத்துவ அதிகாரி யொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் காரணமாக இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களிலும் 156 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் இக்காலப்பகுதியில் இக்காய்ச்சலுக்கு 13692 பேர் உள் ளாகியுள்ளனர் எனவும் அந்த மருத்துவ அதிகாரி கூறினார்.
இந்த நாட்களில் எவருக்காவது இரண்டொரு நாட்களுக்குக் கடும் காய்ச்சல் காணப்படுமாயின் தாமதியாது மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுவது அவசியம் என்று வலியுறுத்திய அம்மருத்துவ அதிகாரி, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை முற்றாக ஒழித்து சுற்றாடலை சுத்தமாகவும் உலர்நிலையிலும் வைத்திருப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அந்த மருத்துவ அதிகாரி மேலும் குறிப்பிடுகையில்; டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் பலவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இருந்தும் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. ஆகவே, டெங்கு காய்ச் சலைப் பரப்பக் கூடிய நுளம்புகளை ஒழித்துக்கட்டுவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக கம்பஹா, கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, கேகாலை, மட்டக்களப்பு களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிக உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன. என்றாலும் ஏனைய மாவட்டங்களிலும் இக்காய்ச்சல் காரணமாகப் பலர் உயிரிழந்திருப்பதையும் மறந்துவிட முடியாது என்றார்.