சர்ச்சைக் குள்ளான இரானின் அதிபர் தேர்தலுக்குப் பிறகு அங்கு நடந்த ஆர்பாட்டங்களில், அந்த தேர்தலில் தோற்ற வேட்பாளரான மிர் ஹொசைன் முசாவி ஆற்றிய பங்கு குறித்து அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று இரானின் அரசாங்க இராணுவம் கோரியுள்ளது.
இரானின் தேசிய பாதுகாப்பை குலைப்பதிலும், அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கும் முசாவி துணை போனதாக குற்றம் சாட்டும் பஸ்ஜி இராணுவத்தின் கடிதத்தை, இரானின் ஓரளவு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான பார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் தலைமையிலான புதிய அரசாங்கம் சட்ட அங்கீகாரமற்ற அரசு என்று தாம் கருதுவதாக முசாவி தமது இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். ஆர்பாட்டங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும் அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்.