இந்து சமுத்திரத்தின் எல்லையில் விபத்துக்குள்ளான யெமன் விமானத்திலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய 14 வயது சிறுமியின் உடல் நிலை கவலைப்படுமளவிற்கு இல்லையென வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியர்கள் கூறினர்.
நேற்று முன்தினம் யெமனிலிருந்து கெமரூன் நோக்கிப் பறந்த விமானம் இந்து சமுத்திரத்தில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 152 பேரில் 14 வயதுச் சிறுமி மாத்திரம் உயிர் தப்பினார். ஏனையோர் உயிரிழந்தனர்.
விமான விபத்தில் உயிரிழந்தோரை மீட்கவும் விமானத்தைக் கரை சேர்க்கவும் மீட்பு பணியாளர்கள் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர். விமான உதிரிப்பாகங்கள், சடலங்கள் என்பன விபத்து நடந்த பகுதியில் கிடப்பதாக தேடுதல் பணியில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பகுதியில் எண்ணெய்க் கசிவு வெளிவருவதால் விமானத்தின் எரிபொருள் தாங்கி உடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை மீட்ட பணியாளர் பிரான்ஸ் வானொலிக்கு சம்பவத்தை விவரித்தார். சிறுமியொருவர் தண்ணீரில் நீந்தியவாறு தள்ளாடினார்.
சிதைந்த விமானத்தின் பாகங்கள் உருக்குலைந்த உடல்களுக்கு மத்தியில் அச்சிறுமி நீந்தியவாறு உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். உடனே தண்ணீரில் மிதக்கும் பொருளொன்றை வீசினோம். அச்சிறுமியால் அதைப் பிடிக்க முடியவில்லை.
பின்னர் தண்ணீரில் குதித்து அச்சிறுமியைக் காப்பாற்றினேன். அவர் என்னுடன் கைகுலுக்கினார். சூடான தேனீரை சிறுமிக்கு கொடுத்தோம். பின்னர் பெயரையும் ஊரையும் கேட்டுத் தெரிந்து கொண்டோம் என விவரித்தார். எஞ்சியுள்ள உடல்கள், விமானப் பாகங்களை மீட்டெடுக்க தேடும் பணிகள் தொடரவுள்ளன. பிரான்ஸ்ஸைச் சேர்ந்த இச்சிறுமி தனது பெற்றோருடன் கெமரூன் நோக்கிச் சென்றபோது விமானம் விபத்துக்குள்ளானது.