மட்டக் களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய் வைத்தியசாலைக்கான அடிக்கல்லினை சுகாதார பராமரிப்பு மற்றும் போசாக்குத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நட்டுவைத்ததுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிக் கட்டிடத்தையும் திறந்துவைத்துள்ளார். மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா புதிய நான்கு மாடி கட்டிடத்தை திறந்து வைத்ததுடன் அக்கட்டிடத்தில் வெளி நோயாளர் சிகிச்சைப்பிரிவு, இரத்தவங்கி, கண், மூக்கு, செவிகளுக்கான சிகிச்சைப் பிரிவினையும் ஆரம்பித்து வைத்து, வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கலை அரங்கினையும் திறந்து வைத்தார்.
வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இன நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல். ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மாநகர சபை முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன், சுகாதார அமைச்சின் செயலாளர் பணிப்பாளர்கள், மாகான சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இங்கு பிரதம விருந்திராக கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா; மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக தேவைப்பட்ட புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இவ் வைத்தியசாலைக்கும் இம் மாவட்ட மக்களுக்கும் தேவையாக உள்ள பல சேவைகளை நிறைவேற்றவுள்ளோம். எதிர்காலத்தில் இந்த மக்கள் தங்களது அனைத்துச் சுகாதார சேவைகளையும் இவ்வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் ஆஸ்பத்திரி அபிவிருத்தி செய்யப்படுமென்றார்.