நூறாண் டுகளுக்கு மேலாக ஆங்கில ஆட்சியாளரின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இலங்கையின் இன்றைய சமுதாயம் ஆங்கிலத்தில் பேசும் திறனை இழந்து நிற்பதாக கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், திருகோணமலை வலயக்கல்வி அலுவலகம் நடத்திய புத்தாக்கக் கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வினைத் தொடக்கி வைத்துப் பேசும்போது குறிப்பிட்டார்.
ரஷ்யா மற்றும் சீனாவில் உயர் கல்வி பெறுவதற்காக செல்லும் நமது மாணவர்கள் அங்கு ரஷ்ய, சீன மொழிகளில் ஆறு மாதகால பயிற்சி பெற்ற பின்னரே உயர்கல்வியைத் தொடர முடிகின்றது. நமது நாட்டில் இருக்கும் போது ஆங்கில மொழியையும் கற்க ஏன் முன்வருகிறார்களில்லை. ஆங்கில மொழியை ஒவ்வொருவரும் கற்க வேண்டியது அவசியம் என்றும் பிரதம செயலாளர் பாலசிங்கம் கூறினார்.
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் முதல்வர் என். நகேந்திரகுமார் பேசும்போது;
உயர்கல்வி பெறும் மாணவர்கள் வர்த்தகம், கலை ஆகிய துறைகளில் அக்கறை காட்டுகிறார்களே தவிர, விஞ்ஞானத்துறையில் அக்கறை காட்டுகின்றார்கள் இல்லை. திருமலை வளாகத்தில் விஞ்ஞானத்துறைக் கல்விக்குரிய வசதிகள் அனைத்தும் உள்ளன. மாணவர் எண்ணிக்கைதான் குறைவு என்று கூறினார்.
மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி வீரவர்தன பேசும்போது;
ஆசிரியர் பற்றாக்குறை பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களுக்குத்தான் பற்றாக்குறை நிலவுகிறது. கணிதபாடம் போதிக்கும் ஆசிரியர்கள் தங்களிடம் கற்கும் மாணவர்களை குறைந்தது அப்பாடத்தில் சாதாரண சித்தி எடுக்கக்கூடியதாக பயிற்றுவிக்க வேண்டும். பாடங்களில் மாணவர்கள் சித்திபெறவில்லை என்ற நிலையை அப்பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்கள் மாற்றியமைக்க வேண்டுமென்று கூறினார். வலயக்கல்விப் பணிப்பாளர் அ. விஜயானந்த மூர்த்தி தலைமை வகித்தார்.