இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிறது. இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணியில் முன்னாள் வீரர் முகம்மது யூசுப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த அணி தற்போது பலம் வாய்ந்த அணியாகக் காணப்பட்டாலும் இலங்கையில் நடைபெறும் ஆட்டம் என்பதால் இலங்கை அணிக்கு சாதகமாக இருக்கும் என்றே விளையாட்டு விமர்சகர்களின் கருத்தாகும்.
இதேவேளை பிந்திக் கிடைத்த தகவலின்படி இலங்கை அணியின் சுழல் மன்னன் முத்தையா முரளிதரனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இப்போட்டியில் ஆடமாட்டாரென்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்தார்.
முரளிதரனின் இடத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக இறுதி நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததுடன் சுராஜ் முகமட் அல்லது ரங்கன ஹேரத் ஆகியோர் நியமிக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணி – இலங்கை கிரிக்கெட் நிறுவன 11 பேர் அணியுடனான போட்டி வெற்றி தோல்வியின் முடிவுற்றது. இதேவேளை இலங்கை அணியின் புதுமுக வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது மட்டுமல்லாமல் சிறப்பாக பந்து வீசி தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸ், சுரங்க லக்மல், கெளசல் சில்வா ஆகிய 3 புதுமுகங்கள் இடம்பெற்று உள்ளனர். மெத்திவ்ஸ் 20 ஓவர் போட்டியில் ஆடி உள்ளார். வேகப்பந்து வீரர் பெர்னாண்டோ நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தம்மிக இடம்பெற்றுள்ளார்.
இலங்கை அணி வருமாறு:
சங்கக்கார (கப்டன்), வர்ணபுர, தரங்க, ஜயவர்த்தன, சமரவீர, டில்சான், மெத்திவ்ஸ், கபுகெதர, மெண்டீஸ், துஷார, தம்மிக பிரசாத், கெளசல் சில்வா, சுரங்க லக்மல்.
பாகிஸ்தான் அணி வருமாறு:-
யூனுஸ்கான் (கப்டன்), மிஸ்பா உல்ஹக், சல்மான் பட், குர்ராம் மன்சூர், முகம்மது யூசுப், சுஐப் மலிக், கமரன் அக்மல், உமர் குல், சஹீட் அக்மல், முகம்மட் ஆமீர், டினேஷ் கனேரியா, அப்துல் ரசாக், அப்துல் ரவுப், பைசால் இக்பால், பவாட் அலாம்.