இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித் துறை ஒழுங்கு செய்துள்ள முதலாவது உலக ஆய்வு மாநாடு பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவுள்ளது.
தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல் பண்பாடு சமூகம் எனும் கருப்பொருளில் நடைபெறவிருக்கும் இந்த மாநாடு இலங்கையிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள அறிஞர்கள், ஆய்வாளர்களை ஒன்றுபடுத்துவதுடன் மனிதப் பண்பியல், சமூக விஞ்ஞானம் தொடர்பாகத் தாம் கொண்டுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் இது தொடர்பான அறிவினை விரிவுபடுத்தவும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 03ம் திகதி தொடக்கம் 06ம் திகதி வரை இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்த உலக ஆய்வு மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டினை பல்கலைக்கழக மொழித்துறை செய்து வருகின்றது.
இந்த மாநாட்டில் ‘தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல் பண்பாடு சமூகம்” எனும் கருப்பொருளுக்கு உட்பட்டு இலக்கியம், மொழியியல், பண்பாடு, வரலாறு, சமுகவியல், நாட்டார் வழக்காற்றியல், நாடகம், நுண்கலை, கல்வி அரசியல், பொருளியல், தமிழ் பேசும் முஸ்லிம்களின் மறு மலர்ச்சி எனும் தலைப்புக்களில் ஏதாவதொன்றின் ஆய்வுச் சுருக்கத்தினையும் கட்டுரையினையும் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விபரங்களைப் பெற விரும்புபவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்திணைக்கள சர்வதேச ஆலோசனைக் குழு செயலாளர்களான கே. ரகுபரன் (0718218177), திருமதி எம். ஏ. எஸ். எப். சாதியா (0718035182) ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.