கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் நடைபெறவுள்ள 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை டிசம்பர் மாதத்துக்கு பிற்போடுமாறு வவுனியா மாவட்ட கல்வி வலய பணிப்பாளர் திருமதி ரஞ்சனி ஓஸ்வர்ல்ட் பரீட்சை ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர் பாக பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுடனும், கல்வி அமைச்சின் செயலாளருடனும் அடுத்தவாரம் பேசுவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் நாடு முழுவதும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்னார் மாவட்டங்களில் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களின் சுமார் 6000 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். கதிர்காமர், அருணாசலம், இராமநாதன், ஆனந்த குமாரசுவாமி போன்ற முக்கிய நான்கு நிவாரணக் கிராமங்கள் உட்பட சுமார் 20 வலயங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4800 மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. எனினும் 5ம் ஆண்டு மாணவர்கள் எல்லா வலயங்களிலும் இருப்பதால் குறுகிய காலத்துள் அவர்களை ஒன்றிணைந்து பரீட்சைக்கு ஆயத்தப்படுத்த முடியாத நடைமுறைச் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்பதுபற்றியும். வவுனியா மாவட்ட பாடசாலைகளில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதால் வவுனியா மாவட்ட, மன்னார் மாவட்ட மாணவர்களும் உடனடியாக பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளமை பற்றியும் வலய கல்விப் பணிப்பாளர், பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்கவுக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கமைய வேண்டுகோள் ஒன்றை விடுக்குமாறு இது தொடர்பாக அமைச்சருடன் கலந்தாலோசித்து பதிலளிப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.