வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்காக அரசு 240.02 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார். யாழ். அரச அதிபர் மாவட்டச் செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரச அதிபர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக அரசாங்கம் 240.02 மில்லியன் ரூபாவை ஒடுக்கியுள்ளது.
இதில் யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள் கட்டிட வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாவும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 45 மில்லியன் ரூபாவும் யாழ். பல்கலைக்ககழகத்திற்கு 43 மில்லியன் ரூபாவும் இலங்கை போக்குவரத்துச்சபையின் யாழ். மாவட்டத்திலுள்ள 3 சாலைகளுக்கும் 36.42 மில்லியன் ரூபாவும் கைதடி சித்த வைத்தியசாலைக்கு 17.6 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் யாழ். மற்றும் வடமராட்சி வலயங்களில் தலா 6 பாடசாலைகளும் வலிகாமம் வலயத்தில் 4 பாடசாலைகளும் தென்மராட்சி வலயத்தில் 2 பாடசாலைகளும் தீவக வலயத்தில் ஒரு பாடசாலையும் புனரமைக்கப்படவுள்ளன. இப் பாடசாலைக் கட்டிட வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நிதி வசதி இன்மையால் இடைநிறுத்தப்பட்டிருந்தன.அதனை முன்னெடுக்கவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் மீசாலைவரணி வீதி,புங்குடுதீவு வீதி, சங்கரத்தை குளக்கட்டு வீதி, கெற்பெலிஉசன் வீதி, சுழிபுரம் பறாளாய் வீதி, காரைநகர் பாலாவோடை ஊரி வீதி, கச்சாய்கெற்பெலி வீதி,ஏழாலை கட்டுவன் வீதி, கோண்டாவில் இருபாலை வீதி மற்றும் அல்லைப்பிட்டி வீதி போன்றன புனரமைக்கப்படவுள்ளன.
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் சுகாதார வசதிகளை மேம்படுத்தல், பொது உள்ளக விளையாட்டு அரங்குகளை விருத்தி செய்தல் மற்றும் விடுதி வசதிகளை மேம்படுத்தல் போன்றன மேற்கொள்ளப்படவுள்ளன.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் யாழ். மாவட்டத்திலுள்ள 3 சாலைகளிலும் 70 பேருந்துகள் திருத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கைதடி சித்த வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் அங்கு மூன்று விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.
இவ் வேலைகள் அனைத்தும் மாவட்டச் செயலகத்தின் மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் முன்னெடுக்கப்படவுள்ளனவென்றும் அரச அதிபர் தெரிவித்தார்.