சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கமான பிணைப்பால் இந்தியாவுடனான தனித்துவமான உறவுகளுக்குத் தடையில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், சர்வதேச கற்கைகளுக்கான சீன நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சீனா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 3 நாடுகளுக்கும் இடையிலான உறவு சாதகமான முறையில் இருக்கின்றது, ரயில் தண்டவாளத்தின் இரு தடங்கள் போன்றதே இந்த இரு நாடுகளுடமான இலங்கையின் உறவாகும். மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் வடபகுதியை அபிவிருத்தி செய்வதற்கு சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார முதலீட்டை அதிகரிக்கவேண்டும்.
இலங்கையுடன் ஏற்கனவே துரிதமாக வளர்ச்சி கண்டுவரும் கேந்திர உறவுகளை சீனா மேலும் விரிவுபடுத்த வேண்டுமென்றும் அமைச்சர் ரோஹித்த போகல்லாகம அழைப்பு விடுத்தார்.
கேந்திர ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு விரிவடைந்திருக்கும் நிலையில், அமைச்சர் ரோஹித்த போகல்லாகம நான்கு நாள்கள் விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றிருக்கிறார்.