மொஹம் மட் யூசுப்பின் அபார சதத்தின் மூலம் இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 50 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியின் இரண்டாவது நாளான நேற்றைய தினத்தில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்நிலையில் 5 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த யூசுப், மிஸ்பா உல் ஹக் ஜோடி 139 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது. இதில் சிறப்பாக ஆடிய மிஸ்பா உல் ஹக் 128 பந்துகளுக்கு 9 பௌண்டரிகளுடன் 56 ஓட்டங்களை பெற்றார்.
மறுமுனையில் அபாரமாக ஆடிய மொஹம்மட் யூசுப் தனது 24 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்தார். 185 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 10 பௌண்டரிகளுடன் 114 ஓட்டங்களை பெற்றார். இறுதியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸுக்காக 94 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 342 ஓட்டங்களை பெற்றது.
இதன்மூலம் அது முதல் இன்னிங்ஸில் இலங்கை பெற்ற 292 ஓட்டங்களை விடவும் 50 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.