விம்பிள் டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் தனது சகோதரி வீனஸை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடந்தது. வில்லியம்ஸ் சகோதரிகளான அமெரிக்காவின் செரீனாவும், வீனஸும் பலப்பரீட்சை நடத்தினார்கள்.
நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் 5 முறை சாம்பியனான வீனஸ் தனது தாக்குதலை தொடங்கினார். முதல் செட்டில் இருவரின் செயல்பாடும் சம பலத்துடன் தெரிந்தது. அதாவது தாங்கள் “செர்வ்’ செய்யும் கேமை மட்டுமே வென்றபடி வந்தனர். இதனால் கடைசி வரை (66) சமநிலை நீடித்தது. இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்க கொண்டு வரப்பட்ட டைபிரேக்கரில் செரீனா, வீனஸின் சவாலை முறியடித்து, அந்த செட்டை தனதாக்கினார். ஆனால் 2ஆவது செட்டில் கடுமையான போட்டி இல்லை. இந்த செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி தனது கட்டுக்குள் கொண்டு வந்த செரீனா, அதனை எளிதாக வென்று விம்பிள்டன் பட்டத்துக்கும் சொந்தக்காரியானார்.
மொத்தம் 12 “ஏஸ்’ சர்வீஸ்களை வீசியது அவரது இலக்கை சுலபமாக்கியது. 85 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் செரீனா 7-6, (7-3), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து, விம்பிள்டன் பட்டத்தை 3 ஆவது முறையாக கைப்பற்றினார். முன்னதாக 2002, 2003 ஆம் ஆண்டுகளிலும் அவர் விம்பிள்டனை முகர்ந்து உள்ளார்.
ஆனால், இந்த மூன்று முறையும் அவர் தனது சகோதரி வீனஸையே வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தத்தில் இது செரீனாவின் 11 ஆவது கிராண்ட்ஸ்லாம் (விம்பிள்டன் 3, அவுஸ்திரேலிய ஓபன் 4, அமெரிக்க ஓபன் 3, பிரெஞ்ச் ஓபன் 1) பட்டமாக அமைந்துள்ளது.
வெற்றி பெற்ற செரீனாவுக்கு ரூபா 6 கோடியே 75 இலட்சமும், 2 ஆவது இடம் பிடித்த வீனஸுக்கு ரூபா 3 கோடியே 37 இலட்சமும் பரிசுத் தொகையாக கிடைத்தது. அமெரிக்காவில் நேற்று முன்தினம் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதே தினத்தில் பெற்ற வெற்றியை செரீனா மேலும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார். இது தவிர, வில்லியம்ஸ் சகோதரிகள் விம்பிள்டன் இரட்டையர் பட்டத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.