ஊவா, வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களை நவீனமயப்படுத்த அரசாங்கம் 320 கோடி ரூபா நிதி ஒதுக்கியுள்ளதாக முன்னாள் ஊவா மாகாண அமைச்சரும் வேட்பாளருமான எம்.ஏ.புத்ததாச தெரிவித்தார்.
ஊவா மாகாணத் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; இன்றைய அரசு நான்கில் மூன்று பங்கு பலத்தைப் பெற்று ஊவாவின் ஆட்சியைக் கைப்பற்றும்.
ஐ.ம.சு.கூ. ஊவா மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக அதிக நிதியினை ஒதுக்கி உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள அதேவேளை நாட்டை கொடிய யுத்தத்தில் இருந்து மீட்டுள்ளது. எனவே இவ்விரு காரணங்களால் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் மூன்றாவது முறையாகவும் ஊவா மாகாண சபையினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே பெறும் என்பதில் ஐயமில்லை. பதுளை மாவட்டத்தில் ஐ.ம.சு.கூ. தலைமை வேட்பாளராக நானும், மொனராகலை தலைமை வேட்பாளராக சசீந்திர ராஜபக்ஷவும் போட்டியிடுவதாலும் நாட்டின் யுத்த வெற்றியை கருத்திற் கொண்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஐ.ம.சு.கூ.வுக்கு ஆதரவாக வாக்களிக்க இணைந்துள்ளனர்.
இன்று ஊவா, வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களை நவீனப்படுத்தும் முகமாக ரூபா 320 கோடியினை அரசு ஒதுக்கியுள்ளது. இது தவிரவும் பதுளை பெரியாஸ்பத்திரியினை முழுமையான வைத்திய உபகரணங்கள் வழங்கி அதனை கொழும்பு வைத்தியசாலையின் தரத்திற்குக் கொண்டு வந்தால் இங்குள்ள 15 இலட்சம் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.
அதுமாத்திரமின்றி கொழும்பில் இருந்து ஊவா மாகாணத்துக்கு, ஊவா மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு மிக குறுகிய நேரத்தில் செல்லும் நீண்ட வீதிகளை செப்பனிட்டுள்ளது. இங்குள்ள தோட்ட வீதிகள், கிராமிய வீதிகள் போன்றவை மகநெகும, கமதிரிய வேலைத்திட்டத்தினூடாக மகிந்த சிந்தனையின் அடிப்படையில் கொங்கிரீட் இடப்பட்டுள்ளது.
ஐ.தே.கட்சியின் பிரபல பிரதேச சபை உறுப்பினர்கள் அறுவர் உட்பட 6,000 பேர் இணைந்து ஐ.ம.சு.கூ.வுக்கு வாக்களிக்கவுள்ளனர். இதனால் ஜே.வி.பி. மற்றும் தமிழ், முஸ்லிம் பெயர்களைத் தாங்கி வரும் கட்சிகளிலிருந்து ஒரு உறுப்பினராவது ஊவா மாகாண சபைக்குத் தெரிவாகுவது சந்தேகமே. இவற்றினை ஊவாவில் வாழும் மக்கள் நன்கு புரிந்துள்ளனர் என்றனர்.