வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கும், ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்குமான தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் 15ஆம் திகதி அஞ்சல் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படுமென உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை மற்றும் ஊவா மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்புகள் எதிர்வரும 27ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக யாழ். மாநகரசபைக்கு கிடைக்கப்பெற்ற 473 விண்ணப்பங்களுள் 335 ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் தெரிவித்தார்.
சரியான தகவல்களை சமர்ப்பிக்காத காரணத்தினால்138 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தபால்மூல வாக்களிப்பை முன்னிட்டு எதிர்வரும் 08ஆம் திகதி யாழ். கச்சேரியில் அஞ்சல் அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படவிருப் பதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை வவுனியா நகரசபைத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்புக்காக கிடைக்கப்பெற்றுள்ள 197 விண்ணப்பங்களுள் 183 விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சரியான தகவல்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால்14 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி கூறினார்.
வவுனியா நகரசபைத் தேர்தலுக்காக சுமார் 500 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புக்களும் நடாத்தப்படவுள்ளன. எதிர்வரும் 07ஆம் திகதி சிரேஷ்ட தலைமை அலுவலகர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். 8ஆம் திகதி கிராம அலுவலகர்கள் மற்றும் அஞ்சல் அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்களுக்கான பயிற் சிகள் நடத்தப்படுமெனவும் 09ஆம் திகதி பிரதம கணக்கீட்டு மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான பயிற் சிகள் வழங்கப்படுமெனவும் உதவித் தேர்தல் ஆணையாளர் கூறினார்.
மேலும் பதுளை மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்ற 17 ஆயிரத்து 418 விண்ணப்பங்களுள் 16 ஆயிரத்து 54 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் உதவித் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.