வவுனியாவிலுள்ள இரண்டு புனர்வாழ்வு நிலையங்களுக்கு வன்னி பாதுகாப்புப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
பூந்தோட்டம் மற்றும் பம்பைமடு பிரதேசங்களிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களின் நிலைமைகளை கேட்டு அறிந்து கொண்டனர்.
பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சிறுவர் படைப் பிரிவைச் சேர்ந்தார்களும் பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்கள் படைப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருகின்றன.இரு புனர்வாழ்வு நிலையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து அவர்களது குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்ட வன்னி படைப் பிரிவின் கட்டளைத் தளபதி தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடனும் இந்த புனர்வாழ்வு நிலையங்களிலுள்ளவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.வன்னி பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதியுடன் இராணுவத்தின் 211வது படையணியின் கட்டளைத் தளபதி லெப்டினன்ற் கேர்ணல் ஜகத் ரத்நாயக்க, யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதிகள், இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.