உலக பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வாய்ப்பை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பொதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த தொழில் உறவுகள் மற்றும் மனித வள அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கமைய இதற்கான கலக ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில் உறவுகள் மற்றும் மனித வள அமைச்சின் செயலாளர் மஹிந்த மதிஹேவா நேற்று தெரிவித்தார்.
இந்த புதிய பொதிமுறைக்கு வேலையற்றவர்களுக்கான சேமநலன் காப்புறுதி திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. தொழில் இழந்தவர்களுக்கு மாதாந்த நஷ்டஈடு கொடுப்பனவு ஒன்று இந்த பொதிமுறைக்கமைய வழங்கப்படும்.
இந்த புதிய பொதிமுறை தொடர்பான யோசனைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழில் உறவுகள் மற்றும் மனிதவலு அமைச்சர் அதாவுத செனவிரட்னவுக்கு வழங்கியுள்ளதுடன், விஷேட குழுவொன்றையும் நியமித்துள்ளார். நிதி, தொழில் உறவுகள், கைத்தொழில் ஆகிய அமைச்சுக்கள், மத்திய வங்கி, இலங்கை முதலீட்டுச் சபை, ஊழியர், சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இக்குழுவில் அடங்குவர்.
இந்த பொதிமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விஷேட கூட்டம் எதிர்வரும் 9ம் திகதி வியாழக்கிழமை தனது தலைமையில் கூடி ஆலோசனை செய்து, ஆரம்பக்கட்ட அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். தொழில் இழந்தவர்களுக்கு இந்த புதிய பொதிமுறைக்கமைய மாதாந்தம் நஷ்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. தொழி லிழக்கும்போது ஏற்கனவே எடுத்துக்கொண்டிருந்த மாதாந்த சம்பளத்தை அடிப்படையாக வைத்து 50 வீத கொடுப்பனவு சுமார் ஒருவருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளது.
திரும்ப தொழில் கிடைக்கும் வரை அல்லது இழந்த தொழில் மீண்டும் நியமிக்கப்படும் வரை இந்த தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆறு மாத காலத்தில் இது மீளாய்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவரது தகுதி அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி அவசர யோசனை முன்வைத்ததை அடுத்து தொழில் அமைச்சர் குறுகிய காலத்தில் இதற்கான திட்ட வரைபை தயாரித்து வருகின்றார். உலக பொருளாதார நெருக்கடியை அடுத்து கைத்தொழில் துறையைச் சேர்ந்த 6.5 மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் தொழில்களை இழந்தனர்.
இந்நிலையில் உலக வங்கியின் அண்மைக்கால அறிக்கையின் படி மிகவும் குறைந்த அளவு பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை உள்வாங்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் ஏற்றுமதி துறை சிறிய பாதிப்புக்குள்ளான போதிலும், தற்பொழுது அது சீராகிவருகின்றது என்றார்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 1994-1997 ஆம் ஆண்டு காலத்தில் தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் இதுபோன்ற நெருக்கடிக்கு ‘சிரம வாசனா’ என்ற நிதியத்தை ஆரம்பித்து உரிய நடவடிக்கையை எடுத்திருந்தார். இந்த திட்டம் புதிய பொதிமுறைக்கு உந்து சக்தியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.