இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து 2011ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட மாட்டாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது ஐசிசி.
லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தப் போட்டியை கூட்டாக நடத்தவிருந்த பொருப்பிலிருந்து பாகிஸ்தானை விலக்கியது ஐசிசி என்பது நினைவிருக்கலாம். பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட 14 போட்டிகளையும் இந்தியா, இலங்கை, வங்கதேசத்திற்கு பிரித்துக் கொடுத்து விட்டது ஐசிசி.
ஆனால் இதை எதிர்த்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தனது நிலையில் எந்த மாறறமும் இல்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐசிசி தலைவர் டேவிட் மார்கன் கூறுகையில், பாகிஸ்தான் எடுக்கும் எந்த நடவடிக்கையும் போட்டியை, இந்தியா, வங்கதேசம், இலங்கை இணைந்து நடத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்தாது.
தெற்காசியாவை விட்டு போட்டித் தொடரை மாற்றும் எண்ணமே இல்லை. அதற்கான தேவையும் இருப்பதாக நான் கருதவில்லை. இந்தியா, இலங்கை, வங்கதேசமே போட்டித் தொடரை நடத்தும் என்றார் மார்கன்.