வவுனியா நலன்புரிநிலைய பாடசாலைகளில் தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக சிந்தனைவட்டம், தேசம்நெற் இணைந்து வழங்கிவரும் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் 1057 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 1 முதல் 4 வரையும் மொத்தம் 4 செயல்நூல்களும், 30 விசேட மாதிரிவினாப்பத்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த மாதிரிவினாப்பத்திரங்களும், செயல்நூல்களும் மாணவர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டு நலன்புரிநிலைய ஆசிரியர்கள் மூலமாக மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுவதாக நலன்புரிநிலைய பாடசாலைகளின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வன்னி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து நலன்புரிநிலையங்களில் தரம் 05 இல் பயிலும் மேலதிக மாணவர்களின் எண்ணிக்கை 3900ஆக உயர்ந்துள்ளது. நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 53 பாடசாலைகளில் இம்மாணவர்கள் பயில்கின்றனர். நலன்புரிநிலைய பாடசாலை இணைப்பாளரும், கல்வி அதிகாரியுமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மாணவர்களுக்கான மாதிரிவினாப்பத்திரங்களையும், செயல்நூல்களையும் அனுப்பும் பணியை தற்போது சிந்தனைவட்டமும், தேசம்நெற்உம் ஆரம்பித்துள்ளது. இப்பணிக்கு லண்டனில் அகிலன் பவுண்டேசன் அமைப்பினரும், இலங்கையில் மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியமும், மேலும் சில பரோபகாரிகளும் உதவி வருகின்றனர்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள 4872 நலன்புரிநிலையங்களிலுள்ள மாணவர்களுக்கும் சிந்தனைவட்டம் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
இப்பரீட்சை முடிந்த பின்பு க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் முடிவெடுத்துள்ளது. குறுகிய காலத்தில் மாணவர்களை வழிநடத்தக்கூடிய வகையில் இதற்கான செயல்பாட்டு திட்டமொன்றை பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் இணைந்து சிந்தனை வட்டமும், தேசம்நெற் உம் வகுத்து வருகிறது.
அஜீவன்
நல்ல விடயம். வாழ்த்துகள். இதற்கான பங்களிப்பில் இணைந்து உதவ விரும்புகிறேன். ஜெயபாலன் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.