“பயங்கர வாதிகளை முறியடித்து யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டுள்ள இன்றைய சமகாலத்தில் வடக்கில் பாதிக்கப்பட்டு வவுனியா முகாம்களில் தங்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்களைச் சென்று பார்வையிட எமக்கு அனுமதி தர மறுப்பதானது அரசாங்கத்தின் சூழ்ச்சியையே எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் அங்குள்ள யதார்த்தபூர்வ உண்மை நிலவரத்தை அரசு மூடிமறைப்பதாகவே எமக்கு எண்ணத் தோன்றுகிறது” என்று மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவி ரோசி சேனநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு இவர் தொடர்ந்தும் கூறியதாவது:
“இலங்கையில் மேல் மாகாணத்திலேயே அதிகமாக பல்லின மக்கள் வாழ்கின்றனர். அதுபோலவே மேல் மாகாணத்திலேயே அரச தரப்பில் பல்வேறு வகையிலான துஷ்பிரயோக செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அரச வளங்கள், சொத்துக்கள் என இன்னோரன்ன அம்சங்களில் அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்து வருகின்றது. டாக்டர் ராஜித சேனாரட்ன துஷ்பிரயோக நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஊடகங்களுக்கு அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். எனினும், அரச தரப்பே அதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. வாசுதேவ நாணயக்காரவும் இது விடயமாக அண்மையில் ஜனாதிபதியிடம் இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.
அரச வளங்களையும், உடைமைகளையும் துஷ்பிரயோகம் செய்பவர்களைக் கைது செய்வதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் தமது குடும்ப நலன்களுக்காகவும் சுயதேவைகளுக்காகவுமே அரசாட்சி புரிகின்றனர். மக்கள் குறித்து எவ்வித அக்கறையும் இவர்களுக்குக் கிடையாது. மக்களிடமிருந்து வரிகளை பெற்று இன்றைய அரசாங்கத்தின் அமைச்சர் களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பொக்கட்டுக்களை நிரப்புகின்றனர்.
அதேநேரம் எண்ணெய், காஸ் உட்பட அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளையும் காலவரையறையின்றி தமக்கேற்றாற்போல் அடிக்கடி அதிகரிக்கின்றனர். இதன் மூலம் மக்களது பணமே சூறையாடப்படுகின்றது.
மூன்று தசாப்த காலத்திற்கு பின்னர் நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்ல நல்ல சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த அரிய சந்தர்ப்பத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுவே எமது வேண்டுகோள். காலத்தை இழுத்தடிக்காது உடனடியாகவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசு பெற்றுக் கொடுப்பதோடு நாட்டில் இடம்பெறும் லஞ்ச ஊழல் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். அவற்றில் ஈடுபடுவோரை அரசு சட்டத்தின் முன் கொண்டு வந்து உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஊடக செயற்பாட்டுக்கு இடையூறினை ஏற்படுத்தாது சுதந்திரமான முறையில் ஊடகவியலாளர்கள் தமது ஊடகப் பணியினை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். நாட்டில் இடம்பெறும் மிக மோசமான செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியும் அவரது சகபாடிகளும் தமது இதயங்களை ஒருகணம் தொட்டுப் பார்த்துச் சிந்திக்க வேண்டும். மக்களுக்கான வாழும் உரிமையை அரசு வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.