முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி

cricket_sl_won_itest_pakistan.jpgபாகிஸ் தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.  நான்கு நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் 168 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸக்காகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இலங்கை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து வெற்றியைப் பறிகொடுத்தது.

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இந்த முதலாவது டெஸ்ட் போட்டி காலி, சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமானது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்ட இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய தரங்க பரணவிதான 72 ஓட்டங்களைப் பெற்றார். தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பரணவிதான இப்போட்டியில் தனது முதலாவது அரைச் சதத்தைப் பெற்றதோடு அதிகூடிய ஓட்டத்தையும் பதிவு செய்துகொண்டார்.

தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 342 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணிக்காக யூசுப் யொஹானா 112 ஓட்டங்களையும் மிஸ்பாஉல் ஹக் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவன் குலசேகர 71 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சுக்காக ஆடிய இலங்கை அணி 217 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக முதலாவது இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றிருந்த பரணவிதானவே இரண்டாவது இன்னிங்ஸிலும் கூடிய எண்ணிக்கையாக 49 ஓட்டங்களைப் பெற்றார்.

50 ஓட்டங்கள் மேலதிகமாகப் பெற்ற நிலையில் 168 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இன்றைய நான்காவது நாளின் பகற்போசன இடைவேளைக்கு முன்னதாகவே சகல விக்கட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இலங்கை அணி சார்பாக அபாரமாகப் பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் தனது முதலாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொண்டதோடு இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணியின் ரங்கன ஹேரத் தெரிவானார்.
இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • sitharaman
    sitharaman

    WELDONE MY BOYS.AM PROUD OF YOU

    Reply
  • palli
    palli

    பாராட்டலாமே;

    Reply
  • nallurkantha
    nallurkantha

    Wicket played a crucial role. Meanwhile Sanga is lucky to have lost the toss. Batting last innings is always a difficult task. Weather made the ball to move. Umpring also not at its best. If the referel system were there things would have been different and we were able to dominate the proceedings. Dont write off mendis. He was a threat. Hearath was excellent. It was a team work. Well done Sanga and boys.

    Reply