அமைச்சர்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களின் பெயரை பயன்படுத்தி சட்ட விரோதமாக நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குழு ஒன்றை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்தக் குழுவில் ஐவர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்று தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவரில் தொழில் அமைச்சில் கடமை புரியும் இருவர், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் இருவர் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊழியர் ஒருவரும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
முக்கிய அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஆகியவர்களின் பெயர்களை பயன்படுத்தியே இவர்கள் நிதிச் சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அமைச்சர்களிடம் பல்வேறு வேலைகளை செய்து தருவதாக பொய் வாக்குறுதிகளை கூறியே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் பெயரை பயன்படுத்தி பல்வேறு மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சில அமைச்சுக்கள் பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததோடு இது தொடர்பான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் பொலிஸ் தலைமையகத்திற்கு அறியத் தருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இது தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும் அனுமதியை கொழும்பு குற்றப் புலனாய்வு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றும் முன்தினம் ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்