கிழக்கு மாகாண வைத்தியசாலைகளிலும் மருத்துவர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமையினால் வைத்திய சேவைகளின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்தது. உள்ளக மருத்துவர்கள் நியமனம் தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இரண்டு சுற்றிக்கைகளிலும் முரண்பாடுகள் இருப்பதால் அதனை ரத்து செய்யக் கோரி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடெங்கிலும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் மட்டுமே இன்று இடம்பெற்றதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் கூறினார். அதேவேளை, உள்ளக மருத்துவர்கள் நியமனம் தொடர்பான முரண்பாடு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.