விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் போராட்டத்திற்கு பின்னர் மகுடம் சூடிய பெடரர், பீட் சாம்ப்ராஸின் அதிக கிராண்ட்ஸ்லாம் சாதனையையும் முறியடித்தார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் கௌரவமிக்க பந்தயமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த இரண்டு வார காலமாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வந்தது. கடைசி நாள ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி அரங்கேறியது.
கிண்ணத்திற்காக இறுதிப் போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரராக இருந்த சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரும், 6ஆம் நிலை வீரர் அமெரிக்காவின் அன்டி ரொடிக்கும் சந்தித்தனர். இறுதிப் போட்டிக்கே உரிய விறுவிறுப்புடன் இருவரும் விட்டுக்கொடுக்காமல் கடைசிவரை போராடினர். இதனால் ஆட்டம் 5 செட்கள் வரை நீடித்தது. இதில் 4 மணி 16 நிமிடங்கள் போராடிய பெடரர் முடிவில் 5-7, 7-6, (86), 7-6, (75), 3-6, 1-614 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசி செட் மட்டும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மோதலில் பெடரர் 50 ஏஸ்களும், ரொடிக் 27 ஏஸ்களும் வீசியிருந்தனர். 27 வயதான பெடரர் 6ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
அது மட்டுமின்றி இந்த விம்பிள்டனை வென்றதன் மூலம் பெடரரின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது. இதையடுத்து அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெருமையை இதுவரை தக்க வைத்திருந்த அமெரிக்க பீட் சாம்ப்ராஸின் (14 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை பெடரர் முறியடித்து சரித்திரத்தில் இடம்பெற்றார்.
ஓய்வு பெற்ற பீட் சாம்ப்ராஸ் விம்பிள்டனை 7 முறையும் அமெரிக்க ஓபனை 5 முறையும், அவுஸ்திரேலிய ஓபனை 2 முறையும் வென்றுள்ளார். ஆனால், பிரெஞ்ச் ஓபனை மட்டும் அவரால் கடைசி வரை வெல்ல முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்திபன்
இறுதிவரை பரபரப்புடனேயே பார்த்துக் கொண்டிருந்தேன். பெடரர் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டுமென்ற ஆதங்கத்தில். பல மணிநேரப் போராட்டத்தின் பின் பெடரர் வெற்றி பெற்று உலக சாதனையும் படைத்து விட்டார். மனமார்ந்த வாழ்த்துகள்.
அஜீவன்
எமது நாட்டு வீரனுக்கு வாழ்த்துகள்.