அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம கொலனியில் தனிமையில் வாழ்ந்த பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். டயகம பிரதேசத்தில் முன்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக சேவையாற்றி வந்த 65 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை முற்பகல் வேளை வரை ஆசிரியை முன்பள்ளிக்கு வருகைதராததால் பெற்றோர்கள், ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று பார்த்த போது ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ளமையை அறிந்து அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டனர். இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கணவனை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த இந்த முன்பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டமையானது டயகம பிரதேச மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.