இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் தலைமையிலான இந்தியத் தூதரகக் குழு ஒன்று இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் செல்கின்றது. நாளை மாலை வரை இக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்புப் பிரிவு இணைப்பாளர் கப்டன் பிரதாப்சிங், அரசியல் பிரிவு அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுவினரே இன்று செல்கின்றனர். அவர்கள் யாழ். போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழகம், யாழ். பொது நூலகம் ஆகியவற்றுக்கு நேரில் விஜயம் செய்து அங்கு இந்தியப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வர்.
யாழ். குடாநாட்டில் கலாசாரப் பரிவர்த்தனைத் திட்டங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்றவற்றிலும் மக்களின் சமூக அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் இந்தியா ஆற்றக்கூடிய ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் இக்குழு கண்டறியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது