நாடெங் கிலுமுள்ள சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பாதுகாக்க விசேட வேலைத் திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. நீதி அமைச்சின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ஜகத் வெல்லவத்த தெரிவித்தார். இத்திட்டம் குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று பிற்பகல் அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இத்திட்டத்தின்படி சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான மீள் கணக்கெடுப்பொன்று நடத்தப்படவுள்ளதுடன் அச்சிறுவர்களுக்கு உரித்துடைய சொத்துக்களின் விபரங்கள் குறித்தும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளம்பருவத்தினர் தொடர்பாக கடந்த 2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி நாடளாவிய ரீதியில் 5700 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 754 பேர் தமது பெற்றோர் இருவரையும் இழந்தவர்களாவர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான மீள் கணக்கெடுப்பு எதிர்வரும் 13ஆம் திகதி ஹம்பந்தொட்டையிலும் 15ஆம் 16ஆம் திகதிகளில் ஹிக்கடுவயிலும் நடைபெறவுள்ளதோடு அதனைத் தொடர்ந்து நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படும்.
இக்கணக்கெடுப்பின் பின்னர் இச்சிறுவர்களின் பேரில் இலங்கை வங்கியூடாக வங்கிக் கணக்கொன்றும் ஆரம்பித்துக் கொடுக்கப்படவுள்ளது. இதேவேளை, சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை சட்டத்துக்கு முரணாக பராமரித்து வருவோர் இரண்டு வருட சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.