கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் திடீர் பரிசோதனைகளை மேற்கொள்ள பரிசோதனைக் குழுவொன்று ஏற்படுத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருகோணமலை மாவட்ட சுகாதர சேவையை மேம்படுத்தல் தொடர்பான கூட்டத்தின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாணத்திலுள்ள சில வைத்தியசாலைகளில் கடமை நேரத்தில் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருவதால், வைத்தியசாலைப் பரிசோதனைக் குழுவொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் விடுத்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்டே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள், சுகாதரத் துறையின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.