புலிகளின் படையில் இருந்து அரசாங்கத்திடம் சரணடைந்த சிறுவர்கள் புனர் வாழ்வளிக்கப்பட்டு நாட்டின் அபிவிருத்திப் பணிகளில்; ஈடுபடுத்தப்படுவர் என வன்னிப் பிரதேச கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.தம்பமடுவ மற்றும் பூந்தோட்டம் ஆகிய பிரதேசங்களில் இயங்கும் சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் முகம்களுக்கு அவர் அண்மையில் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இத்தகவலைத் தெரிவித்தார். இது தொடர்பில்; கட்டளைத் தளபதி மேலும் கூறியதாவது,
புலிகளின் பிடியிலிருந்த தப்பி அரசாங்கத்திடம் சரணடைந்த சிறுவர்களுக்கு புனர் வாழ்வளிக்கும் திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் புலிகளினால் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்டவர்களே. அவர்கள் இப்போதுதான் சுதந்திரக் காற்றை சுவாசித்து சுயமாக இயங்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு விருப்பமான துறைகளில் அவர்களை வழி நடத்தி நாட்டின் நற்பிரஜைகளாக்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.