பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 5 தடவைகள் மின் விநியோக தடை ஏற்பட்டதினால் சபையில் அடிக்கடி இருள் சூழ்ந்து மறைந்தது.
உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசேட வர்த்தகமானி அறிவித்தல்களின் மூலம் வெளியிடப்பட்ட கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரவிகருணாநாயக்க பேசிக் கொண்டிருக்கும் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. முதல் 3 சந்தர்ப்பங்களில் மின்விநியோகம் அடிக்கடி தடைப்பட்டு மீண்டும் வழமைக்கு வந்தது.
இதன்போது சபையில் இருள் சூழவே அரசாங்கத்தின் நிலைமையும் இதுவே என்று ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் 2 தடவைகள் மின் விநியோக தடை ஏற்படவே நாட்டின் நாளைய தலைவர்கள் பாராளுமன்றத்தின் நிலைமையை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். என்று கலரியில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவர்களை சுட்டிக் காட்டி ரவி கருணாநாயக்க கூறினார்.
இதன்போது சபையில் இருந்த அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார ஏதோ கூறிவிட்டு தனது ஆசனத்திலிருந்து எழுந்து சபையை விட்டு வெளியில் செல்ல முற்பட்டபோது அமைச்சரின் பச்சை நிற சால்வை பொன் நிறமாக மாறிவிட்டதாக ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அதேநேரம், அது பச்சோந்தியின் நிறமென ஜே.வி.பி. எம்.பி.யான திலகரட்ன விதானாச்சி கூறினார்.