நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளதென டெங்கு நோய் தடுப்புப்பிரிவு தெரிவிக்கின்றது. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் 08-07-2009வரை இந்த எண்ணிக்கை நிலவியதாகவும் இதேகால எல்லையில் டெங்கு நோயால் 168 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும் கடந்த வாரம் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரையான நான்கு நாட்களில் மாத்திரம் 569 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொழும்பு, கண்டி, கேகாலை, ஆகிய மூன்று மாவட்டங்களிலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் காணப்படுகின்றனர். ஏனைய மாவட்டங்களில் நோய் பரவும் நிலை சற்று குறைந்து வருகின்றது. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 237 பேர் டெங்கு நோயினால் பீடிக்க்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் நுளம்புகளை ஒழிப்பதிலும் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் டெங்கு நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது. நுளம்புகளை அழிப்பதற்கான பற்றீரியாக்கள் கூடுதலான நீர்நிலைகள் உள்ள பகுதிகளிலேயே பயன்படுத்தப்படுவதால் ஏனைய பகுதிகளில் நுளம்புகள் பரவாமல் தடுப்பதற்கு சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்கும் பணிகளை மக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென டெங்கு ஒழிப்புப் பிரிவு மக்களுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளது.