பொம்மை! : நோர்வே நக்கீரா

பொம்மை

Valentine’s Day Barbie
அங்கமெல்லாம் தங்கம் பூட்டி
சருகைச்சேலைகள் சரசரக்க
அழகு காட்டி
கோவில்சப்பறம்போல்
பெண்டிர் எங்கு போகினம்?

கண்ட நிண்ட கலர்களில்
கோட்டும் சூட்டும்
மாறிச்சாறிப்போட்டுக் கொண்டு
ஜொகிங் ஷூ(ஒடுகாலணி)வும் மாட்டிக்கொண்டு
ஆண்கள் எங்கு போகினம்?

மகிழுந்து காட்ட
மணவறைக்கோ போகினம்?

கமராக்கள் கண்ணடிக்கும்
சந்தையொன்றில்
பிள்ளையென்று சொல்லி
ஒருபொம்மை கொண்டுவந்தார்
தந்தை சிந்தை போலே
ஆடவேண்டும் என்று
பிள்ளையது பொம்மையாய்
என்றுமாக்கப்பட்டது.

வீடியோ எடுக்கவென்றே
பிறந்தநாள் நடக்குது.
காணத இடமெல்லாம்
கண்டு கழித்துப்போகுது.
வடிவான பெண்கண்டால்
நின்று அங்கு மேயுது.

பெற்றோர்கள் கேக்கு வெட்ட
பிள்ளை போஸ் கொடுக்குது.
பிறந்தநாள் பிள்ளைக்கா? பெற்றோருக்கா?
இது பிள்ளையா? பொம்மையா?

பொன் பொன்னாய் பரிசுகள்
போட்டியாய் வந்தது.
போட்டுப்பார்த்து பெற்றோரே இரசிக்கினம்
வளர்ந்து பிள்ளை விரும்பிக்கேட்டால்
சீதனம் எனச் சொல்லினம்.
பெற்றோரின் விருப்புப்படி
பேருக்கும் புகழுக்குமாய் வாழுமிந்த பிள்ளைகள்
பிள்ளைகளா? பொம்மைகளா?

எம்மண்ணில் எம்மக்கள்
அகதியாய் அலைகிறார்கள்
பேரன் பேத்தியும் பசியுடனே
படுக்கிறார்கள்
இங்கேயோ!!!
ஆனைமுதல் பூனைமுதல்
சாப்பாட்டுக் கோப்பையிலே விழுகுது
மூக்கு முட்ட திண்ட சனம்
ஊர்க்கதைகள் கதைக்கினம்.

வீட்டுக்குள்
கருமுகில் கூட்டுக்குள்
சிகரெட்டு நட்சத்திரங்கள்.
புகையடித்தே பிள்ளைகளை
பழுக்க வைக்கிறார்கள் பெற்றோர்.
பிஞ்சில் பழுத்த பழங்களோ இவைகள்!!

அப்பருக்கு சிகரெட்டு
பிள்ளைக்கு சிகரெட்பெட்டி

தண்ணியடித்துத் தவழுகிறார்
பிள்ளையுடன் தந்தை.
தந்தையடித்த குடித்த தண்ணீரில்
குளிக்கிறது பிள்ளை
பாட்டி பிள்ளைக்கா? பெற்றோருக்கா? ஊருக்கா?

கொடுத்த பிறசென்ட்டுக்கு சமனனாய்
தின்று சிலர் தீர்த்தனர்.
தம் வண்டியைத் தள்ளிக் கொண்டு
கார்வண்டிக்குள் போயினர்.

பத்து வயதிலேயே பிள்ளை
பட்டம் பெறவேண்டுமாம்- அதனால்
ஐந்துநாளும் பிள்ளை பாடசாலை போகுது
வந்து பின்னேரம் பாட்டுப்படிக்கப் போகுது.
சனியெங்கும் தனியாகத் தமிழ்படிக்கப் போகுது
ஞாயிறு தோறும் டான்ஸ் பழகப்போகுது.
பிள்ளையா? பொம்மையா?
தொல்லையதற்கு இல்லையா?

கல்யாணச் சந்தையிலே
பிள்ளை விலைபோகுது.
ரூபாயில் சீதனம்
பவுண் டொலராய் ஆகுது.
போட்டோவில் பார்த்தே
மாப்பிளைத் தேர்வும் நடக்குது
பொன்னும், பொருளும் பணமும் கொடுத்து
பெண்ணையும் சும்மா தள்ளிவிடும்போது.
இதைவிட மலிவாக
பொம்மை எங்கு வாங்கலாம்?

பிறப்பு முதல் இறப்புவரை
தன் விருப்புவிட்டு
பேருக்கும் புகழுக்கும் ஊருக்குமாய் வாழும்
இத்தியாகிகளை
பிள்ளையென்பதா? பொம்மையென்பதா

கவிமலர்கள் – கொச்சைவழக்குக் கவிதை

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Summa
    Summa

    நக்கீரா என்ன நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்குப் பிறந்தநாள் செய்யப்கூடாது என்று சொல்கிறாரா? போருக்குப் போருக்கு என்று பொறுங்கிப்போய் இருக்கிறோம். 50;60 ல் எல்லாம் கொண்டாடுகினம். எங்களை பிள்ளையள் மட்டும் உங்களுக்குக் கண்ணுக்கை குத்துதோ? அது என்ன பொம்மை. எங்கடை விருப்பத்துக்குப் பெத்தனாங்கள் எங்கடை விருப்பப்படி கொண்டாடுவம். உமக்கு விருப்பம் இல்லை என்றால் கொண்டாடாது விடுங்கள்.

    Reply
  • Gajan
    Gajan

    நறுக்குத் தணித்தாற் போலுள்ளது கவிதை. இத்தனை கூத்தும் வெளிநாட்டில் மட்டுமில்லை இலங்கையிலும் நடக்குது. ஆனால் சத்தியமாய் நக்கீரா நான் பொம்மையாய் இல்லாமல் பிள்ளையாய்தான் எனது பிள்ளைகளை வளர்க்கிறேன்.

    Reply
  • Nackeera
    Nackeera

    பிள்ளைகளின் விருப்புக் கணக்கெடுக்கப்படாமல் பெற்றோரின் விருப்பே பல இடங்களில் பேணப்படுகிறது. ஒருவயதுக் குழந்தைக்கு தங்கச்சங்கிலியைப் பற்றியோ அதன் பெறுமதியைப் பற்றியோ என்ன தெரியும்? பிள்ளை ஒரு பொம்மைக்கோ விளையாட்டுப் பொருளுக்கோ கொடுக்கும் பெறுமதியை பொன்னுக்கே எமக்குப் பெறுமதி மிக்க பொருளுக்கோ கொடுக்காது. நாம் முன்பு ஊரில் பணச்சடங்கு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோலாகி விட்டன பிறந்தநாட்கள். கொடுத்த பணத்தை எடுப்பதற்கான ஒரு விழாவாகப் போகிறது. வன்னிமக்கள் ஒருவேளை உணவுக்கு மணித்தியாலக்கணக்கில் வரிசையில் கையேந்தி நிற்கும் போது. ஒவ்வொருவரும் வன்னியில் இடர்படும் தன் சொந்தத்துக்குச் செய்தாலே வன்னி மண் வயிறு நிறையும் அல்லவா? எல்லாம் அவரவர் தனிப்பட்ட விரும்பமே. இக்கவிதையானது 90களில் எழுதப்பட்டது.

    பல நக்கீராவின் கவிதைகள், கதைகள் கட்டுரைகள்
    http://nackeeraa.blogg.no/

    http://nackeeraa.wordpress.com/

    Reply
  • பல்லி
    பல்லி

    நக்கீரனுடன் இனைவதில் பல்லிக்கு மகிழ்ச்சி;

    புரியாத கவிதை இது;;
    புரிந்த பின் கருத்திருக்கு;;
    பகுத்தறிவு சிந்தனையால்;;
    பரிதவிக்கும் நக்கீரன்;;

    கொண்டாட்டம் தவறென;;
    நக்கீரன் கேட்டாரா;;
    நிர்பந்தம் ஏன் என;;
    கேட்பதில் தவறேது;;

    பிறப்புக்கும் இறப்புக்கும்;;
    இருக்கு பல கொண்டாட்டம்;;
    இடையினிலே சிரிப்பதுக்கு;;
    ஏன் இந்த திண்டாட்டம்;;

    அத்தைக்கும் சித்திக்கும்;;
    அர்த்தங்கள் தெரியாது;;
    ஆனாலும் இவர்கள்தான்;;
    கலாசார காவலர்கள்;;

    அஜித்தும் விஜயும்;;
    ஆகா ஓகோவாம்;;
    பெற்றவர்களை பெற்றவர்கள்;;
    கிறுக்கு கிழடுகழாம்;;

    அல்லாவும் ஜேசுவும்;;
    சிவனும் சேர்ந்திருப்பார்;;
    கொண்டாட்ட தினத்தன்று;;
    குதுகலிப்பார் ஒற்றுமையாய்;;

    நேற்றயை மறந்து;;
    மல்லுக்கும் நிற்பதுண்டு;;
    மதம் இனம் சாதியென;;
    பகுத்தறிவை பறக்கவிட்டு;;

    பொய்யான கொண்டாட்டம்,,
    போலியான கொண்டாட்டம்;;
    நிற்பந்த கொண்டாட்டம்;;
    நக்கீரன் கவிதையிது;;

    பல்லி சொல்லி பலிப்பதில்லை;;
    பகுத்தறிவு இருந்துவிட்டால்;;
    மனிதத்தை நேசித்தால்;;
    தினம் தினம் கொண்டாட்டம்;

    பல்லி;

    Reply
  • Nackeera
    Nackeera

    காலம் கடந்து வந்தும் -நற்
    கவிதையொன்றைக் கக்கிவிட்டீர்
    கோலம் கெட்டு நிற்கும்
    கேவலம் கண்டபின்னும்
    பகுத்து அறியா மனிதனுக்கு
    பக்குவமாய் எழுத்துரைத்தால்
    சவுக்கடி போடுகிறார்
    சாகும் வரை நிமிராமல்

    பாலனுக்கு பணத்தைப்பற்றி என்ன தெரியும்; பொருளைப்பற்றி என்ன தெரியும். விளையாட்டுத்தான் உலகம் என்று இருக்கும் குழந்தைகளை பிடித்த இழுத்துவந்து கண்டநிண்டதை எல்லாம் படிப்பித்து கடைசியில் ஒன்றுமில்லா விசரர்களாக்கும் வேலைதான் புலத்தில் நடக்கிறது. பிள்ளையைப் பிள்ளையாய் வளரவிடுங்கள். பெற்றோர் தாம் படிக்கவில்லை என்பதற்காக நாம் நினைத்ததையெல்லாம் பிள்ளை படிக்கவேணும் என்பது முற்றிலும் தவறானது. பிள்ளைகள் என்றும் விளையாட்டின் ஊடாகவே படிக்கிறார்கள். ஒரு பொன்காப்பையும் ஒரு விளையாட்டுப் பொம்மையையும் பிள்ளைக்கு முன்வைத்தால் காப்பை பிள்ளை திரும்பியும் பார்க்காது. குழந்தைகளை அவர்களின் உலகிலேயே வாழவிடுங்கள். அவர்களின் உலகம் தூய்மையானது; உணர்வுகள் மிக்கது காழ்புணர்வுகள் குறைந்து; வஞ்சகம் அற்றது. பத்துவயதில் அவர்களுக்குப் பட்டப்படிப்பு வேண்டாம். பிள்ளைகளையும் பிறந்தநாளையும் பணம்காய்கும் மரங்களாக எண்ணாது, வளர்ந்தவர்களே முடிந்தால் குழந்தைகளின் உலகில் சஞ்சரித்துப் பாருங்கள் நீங்கள் மனிதராவீர்கள்.

    என்கவிதையை பல்லி மிகச்சரியாகப் புரிந்திருக்கிறார். நன்றி. பிறந்தநாள் அன்று அப்பிள்ளை பெற்றோரின் கெளரவத்துக்காகப் படும்பாடு அப்பாடா? எத்தனை சட்டை மாற்றவேணும், வந்தவர்களைப் பார்க்கவேணும், கமராக்காரனின் கெடுபிடிகள் ஒருபக்கம், தன்வயதுப் பிள்ளைகளுடன் பிள்ளை விளையாட முடியாத நிலமை. பிறந்த நாளன்றாவது பிள்ளையைச் சந்தோசமாக இருக்க விடுங்களேன். இதுவே என் ஆதங்கம். பல்லியின் கவிதைக்கு நன்றி

    Reply