தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) சிறுவர்கள் தொடர்பான நான்காவது சிரேஷ்ட உயர் அதிகாரிகள் மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்றுக் காலை ஆரம்பமான இந்த மாநாட்டின் போது இலங்கைக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது.
சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி ஷில் கான்ட் ஷர்மா பிரதம அதிதியாக கலந்து கொண்ட நேற்றைய மாநாட்டிற்கு இலங்கை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் எம். சுமனதாச தலைமை வகித்தார். சார்க் அமைப் பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேவேளை, சார்க் நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் தொடர்பான அமைச்சர்கள் மட்டத்திலான நான்காவது மாநாடு இன்று ஆரம்பமாகிறது. பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் அமைச்சர்கள் மட்ட மாநாட்டின் தலைமை பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் திருமதி சுமேதா ஜீ. ஜயசேன தலைமை வகிக்கவுள்ளார்.
இன்றைய தினம் இந்த மாநாட்டில் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் சிறுவர் விவகார அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 13 வருடங்களுக்கு பின்னர் நடைபெறுகின்ற இந்த மாநாட்டின் போது சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் நலன்களை பிராந்திய மட்டத்தில் பேணுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.