கிளிநொச்சி நகரத்துக்கு இன்னும் இரு வாரங்களில் மின்சார வசதி அளிக்க உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. கிளிநொச்சி நகரத்துக்கு மின்சார வசதி அளிக்கும் திட்டத்துக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது.
வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் வட பகுதிக்கு மின்சார வசதி அளிக்க 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வவுனியாவில் இருந்து மாங்குளம் வரை 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்சாரத் தொகுதி அமைக்கப்பட்டு வருவதோடு மாங்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுவதாக அமைச்சு கூறியது.
இது தவிர கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு வரை 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் மாற்றித் தொகுதி அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பணிகள் இரண்டு வாரங்களில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக அமைச்சு கூறியது.
கிளிநொச்சி நகரத்திற்கு மின்சார வசதி அளிப்பது தொடர்பான ஆரம்ப வைபவம் அண்மையில் மின்சார சபை தலைவர் ஈ. ஏ. எஸ். கே. எதிரிசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது இரணமடு குளத்திற்கருகில் வைத்து முதலாவது மின்மாற்றி பொருத்தப்பட்டது.
வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு மின்சார வசதி அளிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.