ரவி கருணாநாயக்கவின் கடவுச்சீட்டு முடக்கம் – ரூ. ஒரு இலட்சம் ரொக்கப் பிணை; ரூ 10 இலட்சம் சரீரப்பிணை

ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்க, நாணயமாற்று கட்டுப்பாட்டுச் சட்டவிதிகளை மீறிச் செயற்பட்டதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்கவினதும் மேலும் இரு பிரதிவாதிகளினதும் கடவுச் சீட்டுக்களைத் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர, பிரதிவாதிகள் மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுவித்தார்.

ரவி கருணாநாயக்க ஒரு முன்னணி அரசியல்வாதி என்பதால் அவரது கடவுச்சீட்டை முடக்க வேண்டாமென அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்ட போதிலும் அதற்கு அரச சட்டவாதி திலீபா பீரிஸ் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தவேண்டுகோளை நீதிபதி நிராகரித்ததுடன், நேற்று ரவி கருணாநாயக்க, கடவுச் சீட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டுவரவில்லையென அவரது சட்டத்தரணி தெரிவித்ததால், திங்கட்கிழமை அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

வெளிநாட்டுப் பிரஜையான ராஜ் ராஜரட்ணமும் – கலன் இன்டர்நஷனல் மாஸ்டர் பஃண்ட் நிறுவனமும் அனுப்பிய மூன்று மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கியின் அனுமதியின்றி அவர்களின் சார்பில் ஸ்ரான்டர்ட் சார்ட்டட் வங்கியின் கிருலப்பனை கிளையில் வைப்பில் இடுவதற்கு ரெக்ஷியா கோன்ப்ரேட் நிறுவனத்திற்கு உதவியும், ஒத்தாசையும் புரிந்ததாக ரவி கருணாநாயக்க மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. இதனடிப்படையில் இவருக்கும் குறித்த நிறுவனத்தின் ஆலோசகர் லிங்கோன் பியசேனவுக்கும் எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 2006 – 2007 ஆம் ஆண்டுகளுக்கிடையில் மத்திய வங்கியின் அனுமதி பெறாமல் கொழும்பு யூனியன் வங்கியின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இந்தப் பணம் அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெக்ஷியா கோப்ரேட் கொன்சல்டன்ட் நிறுவனத்தின் நிர்வாக முகாமையாளரான ரஞ்சித் தி சில்வா நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றில் சமுகமளித்திருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *