கொள்ளுப்பிட்டி, லிபர்டி பிளாஸா மக்கள் வங்கி கிளையின் உதவி முகாமையாளர் கொலையுடன் தொடர்புடைய இராணுவ கெப்டன் ஒருவர் உட்பட ஐந்து இராணுவத்தினரை சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கெப்டன் ஒருவர், இரண்டு கோப்ரல்கள் மற்றும் இரண்டு இராணுவ வீரர்களே கைது செய்யப்பட்டவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் தருகையில்:-
கடந்த ஏப்ரல் மாதம் 4ம் திகதி வக்ஓயா, லபுகம வீதி, 6/1 இலக்க வீட்டுக்கு அருகிலுள்ள பாலம் ஒன்றின் அருகிலிருந்து கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டெடுத்தனர். உயிரிழந்தவர், அம்பலாங்கொடை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாஸா மக்கள் வங்கி கிளையின் உதவி முகாமையாளராக கடமையாற்றும் குணசிங்க பிரேமதிலக்க எனவும் அடையாளம் காணப்பட்ட போதிலும் கொலையுடன் தொடர்புடையவர்கள் அடையாளங்காணப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர்களின் வேண்டு கோளுக்கிணங்க இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்டுவந்த கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் வெதசிங்க தலைமையிலான குழுவினர் கெப்டன் உட்பட ஐந்து இராணுவ வீரர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட வங்கி உதவி முகாமையாளருடன் மிகவும் நெருக்கமான உறவு வைத்துள்ள கப்டன் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வான் ஒன்றில் நான்கு இராணுவத்தினருடன் முகாமையாளரையும் இணைத்துக் கொண்டு அவிஸ்ஸாவெல்ல பிரதேசத்திற்கு சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
வானில் சென்று கொண்டிருந்த கெப்டன் இடைவழியில் இறங்கிக் கொள்ள ஏனைய நால்வரும் தமது காலில் போடும் மேஸ்களை பயன்படுத்தி வங்கி உதவி முகாமையாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வக்ஓயா பிரதேசத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக எஸ். எஸ். பி. தெரிவித்தார்.
உதவி முகாமையாளரின் கழுத்திலிருந்து தங்கச் செய்ன் மற்றும் கைச்செய்ன்களை இவர்கள் வங்கி ஒன்றில் அடகு வைத்துள்ளனர் அதனையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை கொலை செய்யப்பட்டவர் பாவித்து வந்த கையடக்க தொலைபேசியை பொலிஸார் தேடிவருவதாக தெரிவித்த அவர், விசாரணைகளை தொடர்ந்தும் குற்றப் புலனாய்வுப்பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் குறிப் பிட்டார்.