மைக்கல் ஜக்சனின் உடலில் டாக்டர்களால் பரிந்துரை செய்யப்பட்ட ஏராளமான வலி நிவாரண மாத்திரைகள் ஒரே சமயத்தில் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே ஒரே சமயத்தில் அவ்வளவு மாத்திரைகளை பரிந்துரை செய்தவர் யார் என்று பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
பாப் இசையால் உலகையே ஆட்டிப்படைத்த மைக்கல் ஜக்சனின் மரணத்தில் இன்னும் சந்தேகம் நீடித்து வருகிறது. அவருடைய உடல் இரண்டு முறை பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக சந்தேகம் எழுந்ததால் அவருடைய வயிற்றுப் பகுதிகளும் தனியாக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஏற்கனவே அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த சில தகவல்களை இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டது. அதில் ‘மைக்கல் ஜக்சனின் உடல் முழுவதும் ஊசியால் குத்தப்பட்ட தழும்புகள் இருந்தன என்றும், உடல் பலவீனமான நிலையில் எலும்புகள் நொறுங்கும் படியாக இருந்தது’ என்றும் கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில், வயிற்றுப் பகுதியில் இருந்த விஷம் குறித்த பரிசோதனை அறிக்கையின் (டாக்சிகோலோஜி) சில பகுதிகளை லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி சன்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
மைக்கல் ஜக்சன் உடலில் கலந்திருந்த மதுபான வகைகளின் அளவுகளை பார்த்தால், சாதாரண மனிதனையே கொன்றுவிடும் அளவுக்கு இருந்தது. எனினும் அதிக அளவு மதுபான பழகத்துக்கு நீண்டகாலமாக அவர் பழகி இருந்ததால் அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அதே நேரத்தில் அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகளை ஒரே சமயத்தில் சாப்பிட்டதால் உயிரிழந்து இருக்கிறார்.
வலி நிவாரண மாத்திரைகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் ‘டெமரொல்’ என்ற மாத்திரையும் ஹெரொயின் போதைப் பொருள் கலந்த ‘மெத்தடோன்’ என்ற மாத்திரையும் மைக்கல் ஜக்சன் உடலுக்குள் இருந்தன.
மேலும், அவரது இரத்தத்தை பரிசோதித்து பார்த்த போது மன அழுத்தத்தை போக்கக்கூடிய சக்தி வாய்ந்த மருந்தான ‘ஜெனாக்ஸ்’ இருந்தது.
இது தவிர அறுவை சிகிச்சை செய்யும் முன்பு நோயாளிகளை மயக்கமடைய செய்வதற்காக தரப்படும் ‘புரோபோபோல்’ என்ற மருந்து அவரது வயிற்றுப் பகுதியில் காணப்பட்டது. ‘இன்சோம்னியா’ என்ற நோய் இருந்ததால், அதை தூக்க மாத்திரையாக மைக்கல் ஜக்சன் பயன்படுத்தியதாக அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி தெரியாமல் இருப்பதற்காக நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ‘டிலவ்டிட்’ என்ற மருந்தும் மைக்கல் ஜக்சன் வயிற்றில் இருந்தது. இறக்கும்போது ஒரே சமயத்தில், ‘டெமரால்’, ‘மெத்தடோன்’, ‘புரோபோபோல்’, இன்சோம்னியா’ என பல்வேறு மருந்துகளை மைக்கல் ஜக்சன் சாப்பிட்டு இருக்கிறார்.
எனவே ஒரு மனிதனுக்கு இதுபோன்று ஏராளமான சக்தி வாய்ந்த மருந்துகளை ஒரே நேரத்தில் சாப்பிட பரிந்துரை செய்து மருந்துச் சீட்டு எழுதிக் கொடுத்த டாக்டர் யார் என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் இருப்பதாக ‘தி சன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்தப் பரிசோதனை அறிக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸாரிடம் அளிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி வில்லியம் பிராட்டோன் கூறுகையில், “பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் எங்களுக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதன்படி விசாரணை நடத்தி வருகிறோம். அதிக அளவிலான மாத்திரைகளை திட்டமிட்டு வழங்கப்பட்டதா? அல்லது தற்செயலாக அனைத்து மாத்திரைகளையும் மைக்கல் ஜக்சன் குடித்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.