இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ், உள்ளூர் “ருவென்ரி20′ போட்டியில் விளையாட தெற்கு அவுஸ்திரேலியா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விக்டோரியா அணியில் விளையாடவுள்ளார். அவுஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் உள்ளூர் “ருவென்ரி20′ போட்டிகளில் ஒவ்வொரு அணி சார்பிலும் இரண்டு சர்வதேச வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். இம்முறை தெற்கு அவுஸ்திரேலியா அணி சார்பில் விளையாட அஜந்த மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மெண்டிஸின் முகாமையாளர் ரொஷான் அபேசிங்க கூறுகையில்; “சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த “ருவென்ரி20′ உலகக் கிண்ணத் தொடரில் மெண்டிஸ் சிறப்பாகப் பந்துவீசி அணியின் வெற்றிக்குக் கை கொடுத்தார். தவிர, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் இவர் துல்லியமாகப் பந்துவீசி அசத்தினார். இவரது வருகையால் அணியின் இளம் வீரர்களுக்கு ஊக்கமாக இருக்கும். இவர் அவுஸ்திரேலிய மண்ணில் இதுவரை விளையாடாததால் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் சிறந்த பயிற்சியாக அமையும்’ என்றார்.
இதேபோல், இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் மேற்கிந்தியாவின் டுவைன் பிராவோ இருவரும் விக்டோரியா அணி சார்பில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வீரர் லசித் மாலிங்கா மற்றும் மேற்கிந்தியாவின் கிறிஸ் கெய்ல் இருவரும் மேற்கு அவுஸ்திரேலியா அணி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத் தொடரில் பங்கேற்க மேலும் சில சர்வதேச வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.