இன்றைய யுத்த வெற்றிக்கு வித்திட்ட பெருமை ஐ.தே.கட்சியையும் அதன் தலைவரையுமே சாரும்

“முப்பது வருட போராட்டத்தின் மூலம் படையினர் வட கிழக்கில் பெற்றுக் கொண்ட வெற்றியை அரசாங்கம் தனதாக்கிக் கொண்டு அதன் மூலம் அரசியல் இலாபம் தேடுகின்றது. இன்றைய வெற்றிக்கு வித்திட்ட பெருமை ஐ.தே.கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையுமே சாரும்’

இவ்வாறு மாத்தளை மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார தெரிவித்தார். மாத்தளை ஐ.தே.க. அலுவலகத்தில் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய ரஞ்சித் அலுவிகார எம்.பி.;

2002 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. அரசு அரசியல் சாணக்கியத்துடன் செயற்பட்டு விடுதலைப்புலிகளிடையே பிளவை ஏற்படுத்தி அவர்களைப் பலமிழக்கச் செய்தமையாலேயே தற்போதைய அரசால் அவர்களை வெற்றி கொள்ள முடிந்தது.

இன்றைய பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் தமது நிர்வாகத்தில் இருப்பதால் ஐக்கிய தேசியக் கட்சி செயலிழந்து போயுள்ளது என்ற மாயையை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று இந்த மாயையை உடைத்தெறியும். அதற்கேற்றவாறு ஐ.தே.க. தேசிய மட்டத்தில் அடி மட்டத்திலிருந்தே மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது.

இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மக்கள் பாவனைக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் நாளாந்தம் மலைபோல் உயர்வடைகின்றது. பொருளாதாரப் பிரச்சினையால் செலவு செய்ய முடியாமலிருக்கும் நாட்டு மக்கள் தற்போது ஆட்சி மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர். இதனை நாம் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வீடு வீடாகச் சென்று அனைத்துக் குடும்பத்தினரையும் சந்தித்துக் கலந்துரையாட வேண்டும். குறிப்பாக மாற்றுக் கட்சியினரையும் சந்தித்துப் பேச வேண்டும். பொறுப்புகளை தொண்டர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடக் கூடாது. கட்சியின் தலைமைத்துவத்தின் அறிவுறுத்தலுக்கேற்ப வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • romeo
    romeo

    ஆம் இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு 1983 ம் ஆண்டிலிருந்து வித்திட்ட முழுப்பெருமையும் யு.என் பி அரசுக்கே சேரும். ஆகவே மனித உரிமைமீறல், போர்குற்றங்கள் மீதான குற்ற வழக்குகள் இவர்களிலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

    Reply
  • மகுடி
    மகுடி

    நாட்டு மக்களிடம் பிரிவினை வித்திட்டோர் இவர்கள்தான். இப்போது கூட இடையிடையே அவர்களை வெளிக்காட்டி வருவதை அவர்களாலேயே தடுக்க முடியவில்லை.

    Reply