வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளுக்கென 2 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் இப்பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வவுனியா வேப்பங்குளம், பட்டகாடு, குருமன்காடு பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்களை திறந்து வைத்து அவர்களுக்கான பயிற்சிகளை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்ததுடன், பட்டானிச்சூர், சூடுவந்த புளவு, பழைய குடிமனை பகுதிகளில் தையல் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்ட யுவதிகளுக்கான தையல் இயந்திரம், சான்றிதழ்கள் என்பனவற்றையும் அமைச்சர் வழங்கி வைத்தார். 60 தமிழ், முஸ்லிம் யுவதிகள் இவற்றை பெற்றுக்கொண்டனர்.
அதேவேளை வவுனியா சூடுவந்த புளவு கிராம மக்களின் நீண்டகால தேவையாக இருந்துவந்த வைத்திய விடுதியுடன் கூடிய வைத்தியசாலையை நிர்மாணிக்கவென 95 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்த அமைச்சர் அதற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார்.