மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் செட்டிகுளம் முகாமிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். அங்குள்ள அகதிகளை சந்தித்த அவர் விரைவில் அவர்கள் அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று உறுதியளித்திருக்கிறார். இலங்கையின் முன்னணி பௌத்த அமைப்பான மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் அகதி முகாமிற்கு சென்றமை வரலாற்று முக்கியத்துவமானது என்று கருதப்படுகிறது.
மக்கள் மீளக்குடியேறி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கு பல பணிகள் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாக தமது விஜயத்தின் போது மகாநாயக்கர் இடம்பெயர்ந்த மக்களுக்கு கூறியுள்ளார். அதேவேளை, பாதுகாப்பு செயலாளரும் படையினரும் பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பாராட்டியுள்ளார்.
இதுஇவ்வாறிருக்க, சுதந்திரத்தை தக்கவைப்பதற்கு பாதுகாப்பு மிகவும் அவசியமானது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்தின் அம்பாறையிலுள்ள விசேட அதிரடி பொலிஸ் படையின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு இயல்பு நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான புதிய சவால்களை இப்போது நாம் எதிர்நோக்கியுள்ளோம். அபிவிருத்தி மற்றும் உள்சார் கட்டமைப்பு நடவடிக்கைகளை வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொண்டு வருகிறோம். இப்போது நாம் எட்டியிருக்கும் விடுதலையை தக்கவைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு சமூகத்தின் சகல பிரிவினரையும் உள்ளீர்த்துக் கொள்வது அவசியமானதாகும் என்று அவர் கூறியுள்ளார்.
போரில் பங்களிப்பை நல்கிய விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு நன்றி செலுத்துவதற்காக விஜயம் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், யுத்தத்தினால் 500 இற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இறந்துள்ளதாகவும் அதிகளவு எண்ணிக்கையானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.