ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 630 மில்லியன் யென் பெறுமதியுடைய 38 தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இவற்றில் 7 தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிறுவப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.
மேற்படி தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை உத்தி யோகபூர்வமாக கையளிக்கும் வைபவம் இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரி மைகள் அமைச்சில் நேற்று நடைபெற்றது. இதன் போது ஜப்பான் தூதுவர் குனியோ தகஹாசி தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
மேற்படி 38 தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களில் 31 மத்திய நிலையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதோடு 7 மத்திய நிலையங்கள் எதிர்வரும் தினங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிறுவப்படவுள்ளன. அவை வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பொத்துவில், திருகோணமலை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் நிறுவப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் அடிக்கடி மினி சூறாவளி தாக்கி பெரும் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்கள் அப்பகுதியில் அமைக்கப்படுவ தோடு மினி சூறாவளி, திடீர் வெள்ளம் என்பன குறித்து மக்கள் முன்கூட்டி எச்சரிக்க முடியும் எனவும் இதனால் சேதங்களை மட்டுப்படுத்தவும் முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
ஜப்பான் அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கிய தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை பயன்படுத்தி செய்மதி தொழில்நுட்பத்தினூடாக 10 நிமிடத்துக்கொரு தடவை நாட்டின் சகல பிரதேசங்களினதும் காலநிலை தொடர்பான விபரங்களை பெற முடியும். 2006 ஆம் ஆண்டு நான் ஜப்பான் சென்றிருந்த போது ஜெய்கா அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினேன். அதன் பயனாகவே இந்த நிலையங்கள் அன்பளிப்பாகக் கிடைத்தன.
மோதல் காரணமாக வடக்கு, கிழக்கில் தன்னியக்க காலநிலை இயந்திரங்களை பொருத்த முடியவில்லை. தற்பொழுது முழு நாடும் சுதந்திரம் பெற்றுள்ளதால் அப்பகுதியில் விரைவில் இவற்றைப் பொருத்தவுள்ளோம்.
ஜப்பான் அரசாங்கம் உண்மையான நண்பராக எமக்கு பல்வேறு வழிகளிலும் உதவி வருகிறது. இலங்கை அரசாங்கம் சார்பாக ஜப்பான் அரசுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமை பேரவை அமர்வின் போதும் ஜப்பான் எமக்கு உதவியது என்றார்.