சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியான (எக்ஸிம்) இலங்கையின் வடபகுதியில் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு உதவியளிக்க இணங்கியுள்ளது. சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் லீ ரூகூ வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவை சந்தித்துள்ளார். வடக்கில் புனர்நிர்மாண பணிகளுக்கு உதவியளிக்க தயாராக இருப்பதாக இச்சந்திப்பின் போது அவர் தெரிவித்திருக்கிறார். முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் தொடர்பான பட்டியலை சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இந்தச் சந்திப்பின் போது எக்ஸிம் வங்கியானது தொடர்ந்து இலங்கை தொடர்பாக தாராளத் தன்மையையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தி வருவதாக அமைச்சர் போகொல்லாகம பாராட்டியுள்ளார். பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு எக்ஸிம் வங்கி உதவி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். புத்தளத்தில் அனல்மின் திட்டம், அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தித் திட்டம் என்பவற்றுக்கு சீனாவின் எக்ஸிம் வங்கி உதவியளித்து வருகிறது.
துரிதமாக ஆரம்பித்து விரைவாக பூர்த்திசெய்யும் வங்கியின் கொள்கையை அமைச்சர் புகழ்ந்துள்ளார். இதன்மூலம் மக்களுக்கு துரிதமாக வருவாயும் பொருளாதார அரசியல் ரீதியான சக்தியையும் ஏற்படுத்த வசதியளிக்கக்கூடியதாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தென்னிலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை தொடர்பான விபரத்தையும் அமைச்சர் போகொல்லாகம வழங்கியுள்ளதுடன், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வங்கியிடமிருந்து உதவியையும் கோரியுள்ளார்.