மூன்று வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு காரணங்களுக்காக மூடிக்கிடந்த தேக்கவத்தை கிராமத்தின் குறுக்கு வீதிகள் பொலிஸாரினால் திறக்கப்பட்டுள்ளன. வவுனியா தச்சங்குளம் பகுதியில் அமைந்துள்ள வன்னிப்பிராந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமையக இராணுவ முகாமுக்கு எதிரில் கண்டி வீதியில் இருந்து குறுக்கு வீதிகளாக அமைந்திருந்த பல ஒழுங்கைகளின் நடுவில் பாரிய குழிகள் அமைத்தும், மண் அரண் அமைத்தும் இந்த வீதிகள் தடைசெய்யப்பட்டிருந்தன.
இதனால் இவற்றின் ஊடாக வாகனப் போக்குவரத்துக்கள் செய்ய முடியாதவாறு தடையேற்படுத்தப்பட்டிருந்தது. சைக்கிள்களில் செல்வதுகூட கடினமான முறையில் இங்கு பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பொலிசாரின் பிரதான (பரக்ஸ்) தங்குமிட விடுதிக்கு எதிரில் பிரதான வீதியில் நடத்தப்பட்ட ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து, இந்த வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, இந்தக் கிராமத்து மக்களும் பிரமுகர்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்று பொலிஸார் அந்தப் பகுதி பொதுமக்களின் உதவியோடு இந்த வீதிகளின் தடைகள் அகற்றப்பட்டுள்ளன.