அணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று எகிப்துக்குச் செல்லவுள்ளார். இந்த உச்சிமாநாடு எகிப்தின் ஷாம் அல்-ஷேக் நகரில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டின் நாளைய முதல் நாள் அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்து செல்லவுள்ள ஜனாதிபதி தலைமையிலான இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அபிவிருத்திக்கான சமாதானமும் சர்வதேச ஒருமைப்பாடும் எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் உலகம் எதிர்நோக்கும் சவால்கள், பாதுகாப்பு, ஆயுதக் களைவு, சூழல் மாற்றம், மற்றும் மனித உரிமைகள் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் அணிசேரா நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு, இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக இச்சந்திப்புக்களின்போது அவர்களுக்கு விளக்கிக் கூறவுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அணிசேரா நாடுகள் அமைப்பில் 118 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.