உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருந்த 37 குடும்பங்கைளச் சார்ந்தவர்கள் இன்று கிளிவெட்டியில் மீள் குடியேற்றப்பட்டனர். சத்துருக்கொன்டான் – இலக்கம் 02 முகாமில் கடந்த 3 வருடங்களாக தங்கியிருந்தவர்களில் நான்காவது தொகுதியினராக 37 குடும்பங்கைளச் சேர்ந்த 122 பேர் 7 பஸ் வண்டிகளில் வெருகல் ஊடாக கிளிவெட்டிக்கு அதிகாரிகளினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சுயவிருப்பத்துடனேயே இக்குடும்பங்கள் கிளிவெட்டி இடைத்தரிப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்களில் 745 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 முகாம்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.
அதிகாரிகளின் தகவல்களின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் இது வரை பலாச்சோலை, மாவடிவேம்பு, கிரிமுட்டி ஆரையம்பதி ஆதிவைரவர் கோவிலடி முகாம் மற்றும் சத்துருக்கொன்டான் இலக்கம் -02 ஆகிய முகாம்கள் மூடப்பட்டு 4 கட்டங்களில் கடந்த யூன் 16 ஆம் திகதி முதல் 155 குடும்பங்களைச் சேர்ந்த 608 பேர் இது வரை அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்