எந்தத் தாய்க்கும் இந்த வயதில் தன் பிள்ளையை பறிகொடுக்கும் நிலை ஏற்படக்கூடாது!!! என கடந்த ஆண்டு குரொய்டனில் கொலை செய்யப்பட்ட நிலாந்தனின் தாயார் கலா மூர்த்தி லண்டன் குரல் பத்திரிகைக்கு அப்போது தெரிவிததிருந்தார். இந்தக் குற்றத்தைச் செய்தவர் அதற்கான தண்டனையை பெற வேண்டும் என்று அன்று வேதனையுடன் தெரிவித்த அத்தாயின் வேண்டுகோளுக்கு சட்டம் பதிலளித்துள்ளது. யூன் 26 2009ல் ஸ்னேஸ்புருக் கிறவுண்கோட் ஸ்ஸ்ரீபன் பிறித்வெய்ற் (30) இக்கொலையைப் புரிந்ததாகத் நீதிபதி டேவிட் றட்போட் தீர்ப்பளித்து உள்ளார். யூலை 3ல் இதற்கான தண்டனை வழங்கப்பட்டது. வெள்ளை இனத்தவரான குரொய்டனில் வாழ்பவரான ஸ்ரீபன் பிறித்வெயிற் நான்கு குழந்தைகளின் தந்தையாவார்.
ஓகஸ்ட் 16 2008 அதிகாலை 1:30 மணியளவில் குரொய்டனில் இடம்பெற்ற தெருவோரக் கை கலப்பில் நிலாந்தன் கத்தி வெட்டுக்கு இலக்காகி சில சிலமணி நேரங்களில் உயிரிழந்தார். நியூஎடிங்ரன் பகுதியில் வாழும் முன்னாள் அன்ன பூரண உரிமையாளர்களான மூர்த்தி (காங்கேசன்துறை) – கலா (கரணவாய்) தம்பதிகளின் புதல்வனே நிலாந்தன். நிலாந்தனும் அவருடைய நண்பர்களும் நண்பர் ஒருவரின் பிறந்த நாளை குவேசியரும் ஜக் டானியலும் அருந்திக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது போதையில் இருந்த நிலாந்தன் தெருவில் சென்று வந்த சிலரை வம்புக்கு இழுத்ததாக இவர்களுடைய நண்பரான மாணவன் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். அப்படி வம்புக்கு இழுக்கப்பட்டவர்களில் ஒருவரே கொலையாளியான ஸ்ரீபன் பிறித்வெய்ற்.
அவ்வழியால் மினிகப்பில் பயணம் செய்துகொண்டிருந்த ஸ்ரீபன் பிறித்வெயிற்றை சம்மர் ரோட்டில் உள்ள ரபிக் லைற்றில் வைத்து நிலாந்தன் வம்பிற்கு இழுத்ததாக நிலாந்தனின் நண்பர்களில் ஒருவரான ரக்டிப் சிங் (23) நிதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார். அப்போது ஸ்ரீபன் பிறித்வெயிற் நிலாந்தனை ‘பக்கி’ என்று இனத்துவேசத்துடன் விழித்துள்ளார். அப்போது நிலாந்தன் மினிகப்பின் பின் இருக்கையில் இருந்த ஸ்ரீபன் பிறித்வெயிற்றை யன்னலினூடாக இழுக்க முயன்றதாக அரச சட்டவாதி கியூசி கிறிஸ்தொப்பர் கின்ச் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் சலசலப்பில் அவ்விடத்தை விட்டகன்ற ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் 20 நிமிடங்கள் கழித்து நிலாந்தனுடனான தனது வன்மத்தை தீர்த்துக்கொள்ள கத்தியுடன் வந்துள்ளார்.
கத்தியை விசுக்கி நிலாந்தனின் கழுத்தில் ஆழமான வெட்டை ஏற்படுத்தியதில் நிலாந்தன் நினைவற்று வீழ்ந்ததை அவருடைய நண்பர்கள் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்தனர். நிலாந்தனின் உயிரைக் காப்பாற்ற நண்பர்கள் போராடிக் கொண்டிருக்கையில் கொலையாளி ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் லண்டன் வீதியில் இறங்கி நடந்து சென்றார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை அருகில் அடிங்ரன் ரோட்டில் உள்ள குப்பைப் பையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். சம்பவ தினம் தனது நான்கு பிள்ளைகளும் உறங்கிக் கொண்டிருந்த மைத்துனியின் பிளற்இற்கு ஸ்ரீபன் பிறித்வெயிற் சென்றுள்ளார்.
நிலாந்தனை தான் தாக்கியதோ அல்லது நிலாந்தன் கொல்லப்பட்டதோ தனக்கு சில நாட்களின் பின்னர் பத்திரிகையில் பார்க்கும் வரை தெரியாது என கொலையாளி ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
உடனடியாக மருத்துவவண்டி அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு காயப்பட்ட நிலாந்தன் அருகில் உள்ள மேடே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவ்விடத்திற்கு வந்த பொலிசார் மதுபோதையில் இருந்த சில தமிழ் இளைஞர்களை அள்ளிச் சென்றனர். அங்கிருந்த மதுப் போத்தல்களையும் அவர்கள் கொண்டு சென்றனர்.
நிலாந்தன் மூர்த்தியுடைய இறுதி நிகழ்வுகள் ஓகஸ்ட் 31 2008ல் ஸ்ரெத்தம் கிரெமற்ரோரியத்தில் இடம்பெற்றது.
நிலாந்தனுடைய கொலை தொடர்பாக சில தினங்களிலேயே ஸ்ஸ்ரீபன் பிறித்வெய்ற் (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் பதிவு செய்யப்பட்டது. கொலையாளி சட்டன் மஜிஸ்ரேட் கோட்டில் ஓகஸ்ட் 21 2008ல் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
ஓகஸ்ட் 21 2008ல் நிலாந்தனின் துயர சம்பவத்தை அடுத்து நிலாந்தனின் பெற்றோரை லண்டன் குரல் பத்திரிகை சந்தித்தது. அப்போது ”எமது பிள்ளைகள் கால நேரத்துடன் வீடுகளுக்கு வந்துவிட வேண்டும், குழுக்களாக குழுமி நிற்பது போன்றவைகளை தடுக்க நாங்களும் பொலிஸாரும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது” என நிலாந்தனின் தாயார் தனது துக்கத்திலும் வேதனையிலும் உறுதியாகத் தெரிவித்து இருந்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் நிலாந்தன் உட்பட ஐந்து தமிழர்கள் வரை பிரித்தானியாவில் வேற்று இனத்தவர்களால் இனத்துவேசத்துடன் கொல்லப்பட்டு உள்ளனர்.