எகிப்து சென்றிருந்த ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்

111111.jpgஅணிசேரா நாடுகளின் 16ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்துக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார்.
 
அணிசேரா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 118 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டுக்கு வருதை தந்திருந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உட்பட 8 உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அணிசேரா அமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து விலகிச் செல்பவரும் கியூபாவின் ஜனாதிபதியுமான ராஉல் கஸ்ட்ரோ,  லிபியத் தலைவர் கேர்ணல் முஅம்மர் அல் கடாபி,  பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி,  தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜெகப் ஸ{மா,  இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், மலேசியப் பிரதமர் அப்துல் ரஸாக் மற்றும் நேபாளப் பிரதமர் மாதேவ் குமார் ஆகிய உலக நாடுகளின் தலைவர்களுடனேயே ஜனாதிபதி சந்திப்புக்களை நடத்தினார்.

இச்சந்திப்புக்களின்போது இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக உலகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.

அபிவிருத்திக்கான சமாதானமும் சர்வதேச ஒருமைப்பாடும் எனும் தொனிப்பொருளில் இரண்டு நாட்களாக நடைபெற்ற இம்மாநாட்டின் முதல் நாள் அமர்வில் ஜனாதிபதி உரையாற்றினார்.

எகிப்தின் ஷாம் அஷ்ஷெய்க் நகரில் நேற்று முன்தினம் ஆரம்பமான இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி தலைமையிலான இலங்கைக் குழுவினர் கடந்த 14ஆம் திகதி எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த மாநாட்டில் பங்குபற்றிய இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *