இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் பங்கேற்கவுள்ளதாக அணியின் வைத்திய அதிகாரியான டேவிட் யங் தெரிவித்துள்ளார்.
முத்தையா முரளிதரன் விளையாடுவதற்குரிய போதிய உடற்தகுதியைக் கொண்டிருப்பதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியுமாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் உலகில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ள முரளிதரன் தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, இலங்கை அணியின் உதவித் தலைவராக முரளிதரன் நியமிக்கப்பட்ட பின்னர் அவர் விளையாடும் முதலாவது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.