புல்மோட்டை முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திரன் மற்றும் மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி ஆகியோரை அங்கிருந்து விடுவித்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மாணவரின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்திற்கு உறுதியளித்துள்ளார். சங்கத்தின் தூதுக்குழு சங்கத்தின் தலைவர் நா.இராஜநாதன் தலைமையில் அமைச்சரை அவரின் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசியது. அப்போது தூதுக்குழு, புல்மோட்டை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டு வலயக் கல்வி பணிப்பாளர்களின் நிலை குறித்து அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தது.
அதன்போதே அமைச்சர் முன்கண்டவாறு உறுதியளித்ததாக, தூதுக்குழுவில் இடம்பெற்றுவரும் சங்கத்தின் பொதுச் செயலாளருமான த.மகாசிவம் பத்திரிகை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
மாரி காலம் தொடங்குவதற்கு முன்பு, முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது என்ற நோக்குடன் அரசு அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. ஆகவே சகல ஆசிரியர்களும் தமது சொந்த இடங்களுக்கு மீளக் குடியமரச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும் என்று அமைச்சர் கூறினார்.
ஜூலை 21 ஆம் திகதி வவுனியா முகாமில் கல்வி அமைச்சினால் சகல தளபாடங்களுடன் கூடிய 20 புதிய வகுப்பறைகள் திறந்து வைக்கப்படவுள்ளன. அந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் கல்வி அமைச்சர் சந்திப்பின்போது அழைப்பு விடுத்தார்.
யுத்தத்தின் போது கொல்லப்பட்ட ஊனமடைந்த, படுகாயமடைந்த ஆசிரியர்களுக்கு அவர்களின் அடுத்த உரிமையாளருக்கும் பொது நிர்வாக சுற்றறிக்கை 21/88 இன் அடிப்படையில் 55 வயது வரை சம்பளம், ஓய்வூதியம், நட்டஈடு வழங்க உடன் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று சங்கம் அமைச்சரைக் கேட்டுக் கொண்டது. இது பற்றிய விபரங்களைத் திரட்டி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.